For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!

04:24 PM Dec 18, 2023 IST | Web Editor
தென்மாவட்டங்களில் மழை  வெள்ள மீட்பு பணியில் ராணுவம்   அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் அறிக்கை
Advertisement

அதிகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை பொழிவு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 

“வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (டிச. 17) காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.   குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில், பல பகுதிகளில் அதி கனமழை பதிவாகியுள்ளது. கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்புப் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக வர உள்ளன.

இதுமட்டுமின்றி, இந்திய ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் மூலம் 62.72 லட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வரப்பெற்ற 13 புகார்கள் உரிய மேல் நடவடிக்கைக்காக தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள் முக்கிய தடங்களிலும் அவசர கால உதவிக்காகவும் சம்மந்தப்பட்ட மாவட்ட நிருவாகங்களின் உத்தரவுப்படி இயக்கப்படுகின்றன. அமைச்சர்களும் கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு விரைந்துள்ளார்.

கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்” 

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement