தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் - நியூஸ் 7 தமிழுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிரத்யேக பேட்டி!
தென்மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நமது செய்தியாளர் ஷெர்லி நடத்திய கலந்துரையாடலின் போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:
“நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. சராசரியாக 39 செமீ மழை பெய்துள்ளதால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 17 குழுக்களாக களத்தில் உள்ளனர். சுமார் 7500 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு கூடுதல் படகுகள் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ராணுவம், விமானப்படை, மற்றும் கடற்படையிடமும் மீட்பு பணிக்காக அரசு சார்பாக உதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் முப்படைகளும் பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் 1070 என்ற எண்ணில் மீட்புப் பணிக்காக தொடர்புகொள்ளலாம். இதுவரை 3863 புகார்கள் இதுவரை வந்துள்ளது.
திருநெல்வேலியில் 61% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி கூறியுள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நியூஸ்7 தமிழ் சேனலில் ஒலிபரப்பான முழு காணொலியை காண: