வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு!
ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாக அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து கலவரம் நின்றது.
இதற்கிடையே நேற்று பிரதமர் சேக் ஹசீனா இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததால் மீண்டும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி அவருக்கு ராணுவமும் கெடு விதித்து இருந்தது.
இச்சூழ்நிலையில் அந்நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. பிறகு அந்நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி வக்கார் ஜமான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
”ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இடைக்கால ஆட்சி அமைக்க நாங்கள் உதவி செய்வோம். முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராணுவம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கடினமான நேரத்தில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைவரின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும். நாட்டில் அவசர நிலையோ அல்லது கட்டுப்பாடுகளோ தேவையில்லை. இன்று இரவுக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.