"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு" - தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஹரிதரன் நேற்று கைதான நிலையில், தற்போது தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் இதுவரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி மற்றும் மற்றொரு வழக்கறிஞர் ஹரிதரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ், பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை -20) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூரை சேர்ந்த கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சென்னானூர் அகழாய்வு – தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!
இதையடுத்து, கைதான ஹரிதரனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அடிப்படையில் அவருடன் பணிபுரிந்த வழக்கறிஞர்கள் திருவள்ளூர் நகர தேமுதிக செயலாளர் மணிகண்டன் மற்றும் ஜல்லிமேடு
வேலா என்கிற வேலாயுதம் உள்ளிட்ட 5 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து
விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.