ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்குவாரா சம்போ செந்தில் - மும்பை விரைந்தது தனிப்படை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்நிலையத்தில் ஆஜரான கூலிப்படையினர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் பல ரவுடிகள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொத்தம் 22 பேர் தற்போதுவரை இந்த கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சிறையில் இருக்கும் நாகேந்திரனை சந்தித்தவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறுபக்கம் ரவுடி ஹரிஹரனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வெகுநாட்களாக ரவுடி சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மும்பை விரைந்துள்ளனர்.