ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தொடரும் கைதுகள்... சிக்குவாரா 'சம்போ' செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 'சம்போ' செந்திலுக்கு தொடர்புடைய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ், என மேலும் 5 பேரை கைது செய்தனர்.
இதனிடையே இதுதொடர்பாக மேலும் சிறையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த ஹரிஹரன், பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய நால்வரையும் நேற்று போலீஸ் காவலில் எடுத்தனர். இதையடுத்து இவர்கள் நால்வரையும் புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வைத்து இன்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்போ செந்திலுக்கு தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்து பரங்கிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணன் மற்றும் சிவகுருநாதன் ஆகிய வழக்கறிஞர்கள் உட்பட 5 நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.