#Armstrong கொலை வழக்கு - புதூர் அப்புவிடம் தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, புதூர் அப்புவிடம் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன்பு ரௌடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தற்போது வரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 27 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கட்சி நிர்வாகிகள், முக்கிய ரௌடிகள் என பலர் சிக்கினர். அந்த வரிசையில் 28-வது நபராக, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக வெடிகுண்டு சப்ளை செய்ததாக, முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக பார்க்கப்பட்ட புதூர் அப்பு, சனிக்கிழமை டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், டிரான்ஸ்சிட் ஆவணம் பெற்று அப்புவை இன்று காலை ரயில் மூலம் சென்னை அழைத்து வந்தனர். அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அப்புவிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் வெடிகுண்டை தயார் செய்வதற்கான மூலப் பொருட்களை வழங்கியது யார்? வெடிகுண்டுகளை தயார் செய்ய கூறியது யார்? அதற்கு நிதி வழங்கியது யார்? கொலைக்கு எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.