ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 4 பேருக்கு போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஹரிதரன் என மேலும் 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு ரவுடிக்கும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, வழக்கறிஞர் ஹரிஹரன், அருள், ராமு ஆகிய 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 4 பேரையும் காவலில் எடுக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஹரிஹரனுக்கு 7 நாட்கள் மற்ற மூவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கேட்டிருந்தது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் உள்ள 4 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4 குற்றவாளிகளும் போலீஸ் காவலுக்கு செல்ல விருப்பமில்லை என கண்ணீருடன் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் மீண்டும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறையினர் மனுதாக்கல் செய்த நிலையில், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோர் போலீஸ் காவல் வேண்டாம் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை விசாரணை தெரிவித்து விட்டதாகவும், தங்களை போலீஸ் கஸ்டடியில் அனுப்ப வேண்டாம் எனவும் அவர்கள் மூவரும் நீதிபதியிடம் கோரினர்.
எனினும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான ஹரிஹரனுக்கு 4 நாட்கள், மற்ற மூவருக்கு 3 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூவருக்கும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் 3 நாட்கள் காவல் வழங்கி உள்ளது.