அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் - படப்பிடிப்பு தொடங்கியது!
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து காதல் கதையில் நடிக்க உள்ளனர். இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பு முக்கிய வேடங்களில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ் அநீதி மற்றும் போர் திரைப்படங்களின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மௌன குரு, மகாமுனி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ‘ரசவாதி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், சுஜித் சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா, ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சித்த வைத்தியராக சதாசிவ பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் சந்திக்கும் பிரச்னைகளே இந்த திரைப்படத்தின் கதை. இப்படம் கடந்த மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் ரசவாதி படத்திற்கு பிறகு நடிகர் அர்ஜுன் தாஸ் இப்படத்தின் மூலம் காதல் கதையில் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர்.
இதேபோல அதிதி சங்கர் விருமன் மற்றும் மாவீரன் படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதர்வாவின் சகோதரரான ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாயா எனும் திரைப்படத்தில் அதிதி சங்கர் நடித்து வருகிறார். இப்படடத்தை விஷ்ணு வர்தன் இயக்க சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் , அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே ஹிருதயம் மற்றும் குஷி ஆகிய படங்களுக்கு இசையமைத்தன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.