"மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?" - அதிமுக கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. துறை சார் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை நடைபெறுகிறது. இதில் அத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கிறார்.
மானிய கோரிக்கையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் அமைச்சர் சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதில் மு.கருணாநிதியின் சாமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு அதில் தமிழ்நாடு அரசின் சின்னமும் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், சாமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கருணாநிதி சமாதி மேல் கோயில் கோபுரம் - மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத திமுக அரசு!
இறந்தவர் சமாதியில் எவராவது கோபுரம் வைப்பார்களா? உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா அமைச்சர் சேகர்பாபு? "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல், புதைவிடத்தில் கோபுரத்தை வைப்பதை விட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும் இந்த திமுக அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா?"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.