தமிழகத்தில் நடப்பவை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா? உங்களுடன் ஊழல் முகாம்களா? அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கப்போவதாகக் கூறி நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஐந்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி மட்டும் 22 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாகப் பெறப்பட்ட மனுக்களில் 80% மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்தத் திட்டம் பெரும் தோல்வி அடைந்துள்ளது.
மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத திமுக அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம் கோரியும், மின்சார இணைப்பு கோரியும் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாயக் கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்டா மாற்றம் செய்வதற்காக நிலங்களின் மதிப்புக்கு ஏற்ற வகையில் கையூட்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக உழவர் அமைப்புகளில் தலைவர்களே குற்றம்சாட்டியுள்ளனர்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், கையூட்டு கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் உங்களுடன் ஊழல் முகாம்களாக மாறிவிட்டன.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இயல்பாக அரசு அலுவகங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகும். இந்த சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்கும் வகையிலும் சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செய்திருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லை; மக்கள் கையூட்டு வழங்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், அதை செய்யத் தவறிய திமுக அரசு, இப்போது முகாம்களை நடத்தி ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் விளம்பரங்களின் மூலமாகவே மக்களை ஏமாற்ற திமுக அரசு முயன்று வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டதுடன், திமுகவின் ஏமாற்று நாடகங்களையும் புரிந்து கொண்டனர். அதனால், வரும் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.