மசூதிகளில் ஒலிபெருக்கியால் தான் மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படவில்லையா? - குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி
“10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்ன சொல்வது” என கூறி பள்ளிவாசல்களில் பாங்கு மற்றும் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் தலைநகர் காந்திநகரைச் சேர்ந்த தர்மேந்திரா ப்ரஜபதி என்ற மருத்துவர் அண்மையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், "மசூதிகளிலும், பள்ளிவாசல்களிலும் நாளொன்றுக்கு தொழுகை 5 முறை ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படுகிறது. இது அதிக சத்தத்தில் ஒலிபரப்பப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. எனவே, மசூதிகளில் தொழுகைகள் ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவானது, குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், அனிருத்தா பி.மாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் தெரிவித்ததாவது:
”மசூதிகளிலும், பள்ளிவாசல்களிலும் 10 நிமிடத்திற்கு மிகாமல் தான் தொழுகை ஒலிபரப்பப்படுகிறது. ஒரு மனிதரின் குரலில் தான் அது ஒலிக்கிறது. அப்படியென்றால், கோயில்களில் இசை வாத்தியங்களுடன் சத்தமாக பாடல்களும், பஜனைகளும் ஒலிபரப்பப்படுகிறது. 10 நிமிட தொழுகையே ஒலி மாசு ஏற்படுத்துகிறது என்றால், கோயில்களில் நீண்டநேரம் ஒலிபரப்பப்படும் பாடல்கள் ஒலி மாசை ஏற்படுத்தாதா?
ஒரு மருத்துவராக இருந்து கொண்டு, ஒலி மாசு என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளீர்கள். அப்படியென்றால், அதற்கான ஆதாரம் உள்ளதா? ஒலி மாசை ஏற்படுத்துவதற்கு எவ்வளவு டெசிபல் ஒலி வேண்டும் என்பதையும், தொழுகை எத்தனை டெசிபலில் ஒலிபரப்பப்படுகிறது என்பதையும் தெரிவித்துள்ளீர்களா? கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களும், பஜனைகளும், அந்தக் கோயில் வளாகத்திற்குள் மட்டும் தான் கேட்கிறதா? அது யாருக்கும் அதிக சத்தமாக தெரிவதில்லையா?
மசூதிகளில் தொழுகை ஒலிபரப்பப்படுவது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு சடங்கு. மேலும், வெறும் 5 முதல் 10 நிமிடத்திற்குள் மட்டுமே இது ஒலிபரப்பப்படுகிறது. இதனால் ஒலி மாசு ஏற்படும் என்ற மனுதாரரின் வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அதற்கான அறிவியல்பூர்வ ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என நீதிபதிகள் தெரிவித்தனர்.