தமிழ்நாட்டில் அமித்ஷா - இபிஎஸ் மற்றும் NDA கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது. திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள், பாஜக மாநில தலைவர் பதவியில் அண்ணாமலையை மாற்றுமாறு வலியுறுத்தியதாக பேசப்பட்டது. இதனால் அண்ணாமலைக்கு பதிலாக, அதிமுக பாஜக கூட்டணிக்கு வசதியாக புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்பதை அண்ணாமலையும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனி விமானம் மூலம் நேற்று இரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, பொன். ராதாகிருஷ்ணன், கரு. நாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, அதித்ஷா இன்று காலை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தை மறைவு குறித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சென்னை மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் வியூகம் குறித்தும், பாஜக தலைவர் தேர்வு, பாஜக கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித்ஷா உடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் சென்றுள்ளார். மாலையில்தான் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா செல்வார் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த நிலையில் பிற்பகல் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சந்திக்கிறார். இதேபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல கூட்டணியில் உள்ள பாமக மற்றும் அமமுக தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு மற்றும் பாமகவிற்கு உட்கட்சி பூசல் ஆகிய காரணங்களால் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது