ஆரணியில் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் உட்பட 2 பேர் கைது!
ஆரணியில் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக வட்டாட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மஞ்சுளா என்பவர் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் பாபு என்பவர் இரவு காவலராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் ஆரணி அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது
தாயார் கண்ணம்மாள் பெயரில் சொத்து மதிப்பு சான்று பெற ஆரணி வட்டாட்சியர்
அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
சீனிவாசனுக்கு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சீனிவாசன் ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளாவிடம் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குமாறு கேட்டதற்கு, வட்டாட்சியர் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் சீனிவாசன் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் ஆய்வாளர் மைதிலி தலைமையில் 7 பேர் கொண்ட குழு சீனிவாசனிடம் ரசாயனம் தடவிய ரூ.10,000 ரொக்க பணத்தை வட்டாட்சியர் மஞ்சுளாவிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து சீனிவாசன் நேற்று இரவு 8 மணியளவில் வட்டாட்சியர் மஞ்சுளாவை அணுகி ரூ.10,000 லஞ்ச பணத்தை கொடுக்கும் போது, வட்டாட்சியர் மஞ்சுளா அந்த பணத்தை இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்கும் படி தெரிவித்தார்.
பின்னர் சீனிவாசன் அந்த பணத்தை பாபுவிடம் கொடுத்தார்.
தொடர்ந்து பாபு அந்த பணத்தை எடுத்து சென்று வட்டாட்சியரிடம் கொடுக்க முயன்ற போது, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபுவை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபு ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.