For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரக்கோணம் பாலியல் வழக்கு - காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

அரக்கோணம் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ராணிப்பேட்டை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
07:43 PM May 20, 2025 IST | Web Editor
அரக்கோணம் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ராணிப்பேட்டை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரக்கோணம் பாலியல் வழக்கு   காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
Advertisement

அரக்கோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வசெயல் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட தெய்வசெயல் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல தவறான தகவல்கள் பரவுவதாகவும், பாதிகப்பட்ட மாணவி பொருத்தமற்ற பல தகவல்களை அளித்ததாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காவலூர் பகுதியை சேர்ந்த தெய்வசெயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன.
மேற்படி சம்பவம் தொடர்பாக காலதாமதமாகவும், சில அரசியல் கட்சியினரிடம் அப்பெண் சென்று முறையிட்டதாலும் காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு மாறானது.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 10.05.2025 அன்றே அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி மனுதாரர்,  தெய்வச்செயல் என்பவரை கடந்த 31.01.2025-ம் தேதி எவ்வித நிர்பந்தமுமின்றி திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததும் தெரியவருகிறது.

மேலும், தன்னை போன்ற 20 வயதுள்ள 20 பெண்கள், தெய்வசெயல் என்பவரது கொடூர பிடியில் சிக்கி உள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார் என சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி, மனுதாரர் தான் அளித்த வெவ்வேறு புகார்களில் தன்னை போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றுக்கொன்று பொறுத்தமற்ற தகவல்களை தெரிவித்துள்ளதோடு, அப்பெண்களைப் பற்றிய எவ்வித தகவல்களையோ, முகாந்திரத்தையோ விசாரணையின்போது தெரிவிக்கவில்லை. எனவே, இதுசம்பந்தமாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அரசியல் பிரமுகரின் உதவியாளர் ஒருவருக்கு மனுதாரரை இரையாக்க முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளது உண்மைக்கு மாறானது. மேற்படி மனுதாரர் கொடுத்த புகார்களில் இதுபோன்ற தகவல் எதையும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. மனுதாரர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுசம்மந்தமாக மனுதாரர் கொடுத்த வெள்வேறு புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த 19.05.2025 அன்று மேற்படி மனுதாரரிடம் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய அனைத்து வழிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் உள்ள அறிவுறுத்தல்களின் படி அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வழக்கில் காவல்துறை சார்பில் மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகலினை கொடுத்தும் மனுதாரர் அதனை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement