நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி | 2-ஆம் கட்ட பயணத்திற்கு தயாரான கனிமொழி எம்.பி தலைமையிலான குழு!
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்க 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக சார்பில் எம்பி கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர்.

இதன்படி, 20 மாவட்டங்களைச்சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோரை நேரில் சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, 4,000க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் நேரிலும், 18,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும், 2,500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வாயிலாகவும், 4,500க்கும் மேற்பட்ட சமூக ஊடகம் வாயிலாகவும், 500க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனிமொழி எம்.பி அடுத்தகட்டமாகப் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கவுள்ளார். மேலும் எழுத்துப்பூர்வமாக, தொலைப்பேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகக் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் அளிக்கப்பட்டிருந்ததுடன், பதிவேடுகளுக்கான காலக்கெடுவாகப் பிப்ரவரி 25 ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.