நெருங்கும் மக்களவை தேர்தல் - திமுக, அதிமுகவில் விருப்பமனு விநியோகப் பணி தீவிரம்!
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம் விநியோகம் தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில், இன்று முதல் அதிமுக சார்பில் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.
மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்றொருபுறம் தேர்தல் பிரசார பணிகளை தொடங்குவதுடன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டு, மார்ச் 1 முதல் மார்ச் 7-ம் தேதிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப். 19-ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் 3வது நாளாக இன்றும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில், வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப். 21) முதல் மார்ச் 1-ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வழங்கப்படும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் அதிமுக தலைமை செயலகத்தில் விண்ணப்ப படிவம் விநியோகம் தொடங்குகிறது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனு வாங்கிச் செல்கின்றனர்.