நெருங்கும் தேர்தல் - பாஜகவுக்கு நிதி வழங்க பிரதமர் மோடி அழைப்பு!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு நிதி வழங்கி உதவிட பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 02), பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார். அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில், 28 பெண்கள், 47 இளைஞர்கள், 27 பட்டியலினத்தவர்கள், 17 பழங்குடியினத்தவர்கள், 57 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்த பட்டியலில் பல நட்சத்திர வேட்பாளர்களும், தற்போதைய அமைச்சர்களும், முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : கடும் வறட்சியில் துனிசியா நாடு... 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு நிதி வழங்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில், “பாஜகவுக்கு நிதி அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ‘விக்சித் பாரத்’-ஐ உருவாக்குவதற்கான எங்களுடைய முயற்சிகளை வலுப்படுத்துங்கள். NaMo செயலி மூலம் பாஜகவுக்கு நிதி வழங்கி உதவிட உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாஜகவுக்கு அவர் ரூ.2000 வழங்கியுள்ளார்.