For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்” - மத்திய அரசு தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 86 இந்தி ஆசிரியர்களும், 65 சமஸ்கிருத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழ் மொழிக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
05:08 PM Mar 24, 2025 IST | Web Editor
“தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்”   மத்திய அரசு தகவல்
Advertisement

நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, நாடு முழுவதும் எத்தனை மாணவர்கள் பள்ளியில் மூன்றாவது மொழி படிக்கின்றனர்?. எந்தெந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது?. எத்தனை பள்ளிகளில் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படுகிறது ?.

Advertisement

இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் பிற இந்திய மொழிகளை எத்தனை மாணவர்கள் பயின்று வருகின்றனர்?. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழி பாடங்களுக்கு எத்தனை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்?. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் தாய் மொழியை கற்றுக் கொடுப்பதற்காக ஏதாவது வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா?.

மாநிலங்ககளில் இயங்கி வரும் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் தாய் மொழியை கற்றுக் கொடுக்க எந்த மாதிரியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன?. ஒருவேளை அவ்வாறு வழிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? என எழுத்துப்பூர்வமாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி,

“புதிய கல்விக் கொள்கை 2020ன் படி மூன்று மொழிக் கொள்கை என்பது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு இந்த மும்மொழிக் கொள்கை என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கையை பொறுத்த வரைக்கும் மாணவர்கள் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த முன்மொழி கொள்கையானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய கல்விக்கொள்கை 2020ல் உள்ள மும்மொழி கொள்கை என்பது மாணவர்கள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வழிவகை செய்வதோடு நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும். அதே வேளையில் எந்த மாநிலத்தின் மீதும் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது எனவும், எந்த மொழியை கற்க வேண்டும், தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மாணவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகும்.

புதிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி மூலம் மாணவர்கள் விருப்பப்படும் பட்சத்தில் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்புகளில் வேறு மொழிகளை கூட தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கல்வியை முடிக்கும்போது மாணவர்கள் தாய்மொழி அல்லாத வேறு ஒரு இந்திய மொழியிலும் புலமை பெறவும் வழி வகுக்கிறது. நாடு முழுவதிலும் மொத்தம் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 65 பள்ளிகளில் ஒரு மொழி பாடமும், 4லட்சத்து 16 ஆயிரத்து 601 பள்ளிகளில் இரண்டு மொழிப்பாடமும், 9லட்சத்து 6ஆயிரத்து 225 பள்ளிகளில் மூன்று மொழிப்பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அந்த வகையில் ஒரு மொழிப்பாடம் வைத்திருக்கும் பள்ளியில் 2 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 241 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரு மொழிப் பாடங்களை பயிற்றுவிக்கும் பள்ளிகளில் 4 கோடியே 16 லட்சத்து 52 ஆயிரத்து 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் மூன்று மொழிப்பாடங்களை பயிற்றுவிக்கும் பள்ளிகளில் மொத்தம் 18 கோடியே 53 லட்சத்து 18ஆயிரத்து 537 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் ஒரு மொழிப்பாடத்தை 21 ஆயிரத்து 725 பள்ளிகள் கற்றுக் கொடுப்பதாகவும், இரு மொழிப்பாடத்தை 35 ஆயிரத்து 95 பள்ளிகள் கற்றுக்கொடுப்பதாகவும்,
ஆயிரத்து 905 பள்ளிகள் மூன்று மொழிப்பாடங்களை கற்றுக்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 40 லட்சத்து 83 ஆயிரத்து 15 பேர் ஒரு மொழிப்பாடத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அதேபோல, 75 லட்சத்து 9 ஆயிரத்து 693 மாணவர்கள் இரு மொழிப்பாடங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் கல வி பயின்று வருவதாகவும், 14லட்சத்து 342 பேர் மூன்று மொழிப்பாடங்களை பயிற்றுவிக்கும் பள்ளிகளில் கல்வி கற்று வருவதாகவும் மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் 86 இந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேவேளையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை பயிற்றுவிக்க ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள்தான் பணியமர்த்தப்படுகிறார்கள் என்றும், தமிழ்நாட்டி உள்ள கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் 24 மாணவர்கள் தமிழை ஒரு மொழிப் பாடமாக தேர்ந்தெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர தமிழ்நாட்டில் 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் "தமிழ் மெய்நிகர் மையம்" மூலம் தமிழ் மொழியை கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement