For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குத்தகை முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12:29 PM Aug 20, 2025 IST | Web Editor
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குத்தகை முறையில் 2192 ஓட்டுனர்  நடத்துனர்கள் நியமனம்   அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1020 ஓட்டுனர்களும், 1172 நடத்துனர்களும் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்க படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

Advertisement

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே மாநகரப் போக்குவர்த்துக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. விரைவில் மேலும் 505 மின்சாரப் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படவுள்ளன. இவை அனைத்துமே ‘‘சென்னை மாநகர கூட்டாண்மை: நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம்’’ என்ற தலைப்பிலான ஒப்பந்தத்தின்படி தனியாரால், தனியார் நிறுவனங்களின் ஓட்டுனர்கள் மட்டும் நடத்துனர்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளன.

மாநகரப் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே 875 ஓட்டுனர்கள், 625 நடத்துனர்கள் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 2192 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்படும் போது, குத்தகை முறை பணியாளர்களின் எண்ணிக்கை 3692 ஆக அதிகரிக்கும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள சுமார் சுமார் 16 ஆயிரம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில் இது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும். மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும், மனிதவளமும் பெருமளவில் தனியார் மயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பெயர் மட்டும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் என்று இருப்பது, "மாப்பிள்ளை அவர் தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற நகைச்சுவையைத் தான் நினைவுபடுத்துகிறது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் சமூகநீதியின் அடிப்படையில் உருவாக்கித் தருவது தான்.

போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நேரடியாக ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நியமிக்கப்படும் போது அவர்களுக்கு கவுரமான ஊதியம் வழங்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இப்போது இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் யாரை வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் நியமிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்களின் உழைப்பும் சுரண்டப்படும்.

போக்குவரத்துக் கழகங்களுக்கு குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதன் மூலம் சமூகநீதியை குழி தோண்டி புதைத்தல், உழைப்புச் சுரண்டலை ஊக்குவித்தல், அரசின் வளங்களை தனியாருக்கு தாரை வார்த்தல் ஆகிய முப்பெரும் பாவங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement