யார் வேண்டுமானாலும் வரலாம் - அன்புமணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் கூறிய பதில்!
தமிழ்நாட்டில் இன்னும் முழுமையாக சமூக நீதி கிடைக்கவில்லை என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும், சமவாய்ப்பு சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் இனியும் பாடுபடுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திப்பில் தெரிவித்தார்.
10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் குறித்துக் கேள்வி கேட்டபோது, "யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம்" என்று தெரிவித்த ராமதாஸ், விழுப்புரத்தில் நடைபெறவுள்ள குறிப்பிட்ட போராட்டத்திற்குத் தான் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறினார். மேலும், "போராட்டம் யார் செய்தாலும் வாழ்த்துக்கள்" என்றும் தெரிவித்தார்.
ஒட்டுக் கேட்கும் கருவி விவகாரம் குறித்துக் கேள்வி கேட்டதற்கு, அந்தக் கருவி இதுவரை காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு "தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு முடிந்தவுடன் காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஒட்டுக் கேட்கும் கருவி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒட்டுக் கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகம் குறித்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறினார்.
பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிர் மாநாட்டிற்கு அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பியபோது, "யார் வேண்டுமானாலும் வரலாம். யாரையும் வரக்கூடாது எனச் சொல்ல முடியாது. எல்லாரும் வரலாம்" என்று ராமதாஸ் பதிலளித்தார்.