டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக போராட்டம் - 5,000 பேர் மீது வழக்குப்பதிவு!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 5,000 பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர்ப்பட்டி, மீனாட்சிபுரம்,
பெருமாள்மலை உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் மத்திய அரசு அமைக்கவுள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல்லாயிரக்கணாக்கானோர் திரண்டதால் 2000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் அனுமதி மற்றும் கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட 5000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,000 ஆண்கள் மற்றும் 2,000 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.