உத்திரமேரூரில் அந்தோனியார் ஆலய தேர் திருவிழா - ஏராளமானோர் பங்கேற்பு!
உத்திரமேரூரில் பழமையான அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரம்
கிராமத்தில் மிகவும் பழமையான புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 87வது ஆண்டு திருவிழாவானது கடந்த ஒன்றாம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நாளிலிருந்து தினமும் சிறப்பு திருப்பலி, தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, அலங்கரிக்கப்பட்ட தேர் மற்றும் சப்பரங்களில்
புனித அந்தோனியார், புனித சூசையப்பர், புனித ஆரோக்கிய அன்னை, புனித சம்மனசு,
திரு இருதய ஆண்டவர் ஆகியோர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர்.
இதில் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு புனித அந்தோனியாரை வழிபட்டனர். பின்னர் இவ்விழாவில் கலந்துக் கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பங்கு தந்தை வினோத் ராஜ் தலைமையில் சிறப்புக் கூட்டு திருப்பலி மற்றும் வானவேடிக்கை நடைபெற்றது.