வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் - தொடரும் சிக்கல்!
சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி என 2 இடங்களில் வாக்கு இருப்பதால், செல்வகணபதியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக சார்பாக புகார் எழுந்த நிலையில், அவரது வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல” – வைகோ பேட்டி!
இதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுடுகாடு கொட்டகை ஊழலில் தண்டனை பெற்று, பின்னர் அதிலிருந்து விடுதலை ஆனது, கலர் தொலைக்காட்சி ஊழலில் தண்டனை பெற்று அதிலிருந்து விடுதலை ஆனது தொடர்பான ஆவணங்களை செல்வகணபதி சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செல்வகணவதியின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற கேள்வி நிலவி வருகிறது.