சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுவதாக அறிவிப்பு.!
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால், இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.
இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடைப்பிடிப்பது வழக்கம். அதன் படி இன்று இரவு 8 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும். நாளை இரவு 8 மணி வரை நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருக்கும்.
இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் பி.ஹரி சார்பில் அனைத்து நுழைவாயில்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.