தவெக வெளியிட்டுள்ள அறிவிப்பு - உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த புதிய யுக்தி!
தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலைய செயலகம் தனது x வலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் 'MY TVK' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். ஜூலை 30 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்துடன், இந்த செயலியின் வாயிலாக ஊர் ஊராக, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைவரின் உத்தரவின்படி, இந்தச் செயலியைப் பயன்படுத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்து, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும், உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதன் முதல் கட்டமாக, நாளை (ஆகஸ்ட் 3, 2025) காலை 9 மணிக்கு, 26 மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 15,652 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். எல்இடி திரை வாயிலாக விரிவான விளக்கங்களுடன் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியை மேற்பார்வையிட, தலைமைக் கழகத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் நேரில் வரவுள்ளது. பயிற்சி பெற்ற முகவர்கள், ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் விருப்பத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைவர் அவர்களின் உத்தரவின்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து, வெற்றிக் கொண்டாட்டத்தை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.