அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடி நடவடிக்கை வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்...!
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“தமிழகத்தின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணாமலை பல்கலைக்கழகம், தனது நூறாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என இந்திய அளவில் புகழ்பெற்ற பலர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக, கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருவது துரதிருஷ்டவசமானது.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய, 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகள், முனைவர் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும், அயற்பணியிட ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் கல்வி நிறுவனங்களிலேயே உடனடியாக உள்ளெடுப்பு செய்ய வேண்டும், பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அயற்பணியிட ஆசிரியர்களைக் கொண்டு யுஜிசி/தமிழக அரசின் விதிமுறைகளின்படி வாரத்திற்கு ஒருவருக்கு வேலைப்பளு 16/14 மணிநேரம் என்ற விகிதத்தில் கணக்கிட்டுத் திரும்ப அழைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஊழியர்களும் பல ஆண்டு காலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை தமிழக அரசு அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய தீர்வு வழங்காத நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் , பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகமும், திமுக அரசும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றன. இதனால், மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக, அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், திமுக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.