“முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை” - திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி!
முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி தில்லை நகரில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது,
“திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் சின்னம் தீப்பெட்டி. பாசிசத்தை எரிக்கும் சின்னம் தீப்பெட்டி. எல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும். இந்தியாவில் மிக பலமான ஐடிவிங் என்றால் அது கண்டிப்பாக திமுக ஐ.டி.விங் தான். எனவே 24 மணி நேரத்தில் நாங்கள் எங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவோம். கூட்டணி கட்சி தலைவர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைவருமே திமுக வேட்பாளர் தேர்தலில் நிற்பதாக தான் எண்ணி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை போன்ற எல்லா இடங்களிலும் பாஜகவின் அழுத்தம் இருக்கிறது. அதேபோல் தேர்தல் ஆணையத்திலும் பாஜகவின் அழுத்தம் இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் டெல்லி முதலமைச்சரை கைது செய்து அந்த கட்சியையே காலி செய்ய திட்டமிடுகிறார்கள். தேர்தலில் நிற்க பணம் இல்லை நிற்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போன்றவர்களிடம் மட்டும் அதிகம் காசு உள்ளதா?
அண்ணாமலையே குலப்பவாதி தான். எனவே அவர் பேசுவதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ளக்கூடாது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை. எங்கள் சின்னம் அல்லது சுயேட்சை சின்னத்தில் தான் நிற்போம் என்று உணர்ச்சி பொங்கி நான் பேசிய போது உண்மையை சொல்ல போனால் வைகோ என்னிடம் இரண்டு நாள் பேசவில்லை. உணர்ச்சி வசப்பட்டு சில விஷயங்களை நான் பேசிவிட்டேன். ஆனால் தவறாக எதையும் பேசவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.