"பதவியை தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை பொய்களை சொல்லி வருகிறார்" - #DuraiVaiko எம்.பி. பேட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கட்சியினரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டிற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தெளிவாக சொல்ல வேண்டும். இந்த ஆட்சியின் அவலத்தை மறைப்பதற்காக மத்திய அரசு மீது குறை சொல்லி வருகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எம்.பி. துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடன் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு போதுமான நிதி வழங்குவதாக அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த துரை வைகோ, "மாநில தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை பொய்களை சொல்லி வருகிறார். சமீபத்தில் அவர் இலவசங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளனர். அங்கு அவர்கள் தேர்தலுக்கு 7 மாதங்களுக்கு முன்பிலிருந்து குடும்பத்திற்கு ரூ.7000 கொடுத்தனர். அதன்மூலம் தான் அவர்கள் மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதி குறித்து உங்களுக்கு தெரியும். கேஸ் சிலிண்டர், மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், அண்ணாமலை இந்தவாறு எப்படி பேசலாம். அண்ணாமலை படித்த இளைஞர்களுக்கு, வருங்கால சமூகத்தினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நபர் என்று நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையை உடைக்குமாறு தற்போது அவரின் நடவடிக்கைகளும், அறிக்கையும் உள்ளது" என்றார்.