Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”... இபிஎஸ் வலியுறுத்தல்!

08:38 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் எளிமையானவர், பொருளாதார
நிபுணர். நிதி அமைச்சராக இருந்த பொழுது இந்தியாவை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டார். பத்தாண்டு காலம் இந்திய நாட்டினுடைய பிரதமராக இருந்து சிறப்பாக ஆட்சி செய்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை உலுக்கக் கூடிய அதிர்ச்சியான சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில்
நடைபெற்றுள்ளது. இந்திய அளவில் மிகச்சிறந்த கல்வி நிலையமாக விளங்கிக் கொண்டிருக்கிற அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதே மாணவிகளுக்கு ஒரு சிறப்பாகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் பல்வேறு சாதனை படைத்திருக்கிறார்கள். இந்திய அளவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி பல்வேறு வேலைவாய்ப்புகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் புகழ்மிக்க பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதோடு பாலியல் சீண்டல் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும் அந்த மாணவி புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த சார் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அந்த மாணவி சம்பந்தப்பட்ட காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். அந்த புகாரில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல் உயர் அதிகாரி, பாலியல் வன்கொடுமை செய்தது ஒருவர்தான். அவர் ஞானசேகரன் மட்டும் தான் என்று சொல்கிறார். ஆனால் மாணவி புகார் கொடுக்கின்ற பொழுது, புகாரிலே ஞானசேகரன் சார் சார் என்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னார். அப்படி என்றால் அவர் யாரை ‘சார் சார்’ என்று கூறினார் என, இதுவரை உயர் காவல்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை. இதை மறைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 70 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் 56 சிசிடி கேமராக்கள் தான் வேலை செய்வதாகவும் தெரிவிக்கிறார்கள். மற்றவை ஏன் இயங்கவில்லை? ஞானசேகரன் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 20க்கும்‌ மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. சில வழக்குகளுக்கு தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. 23ஆம் தேதி ஞானசேகரன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். 24ஆம் தேதி மாணவி புகார் செய்திருக்கிறார். புகார் செய்ததும் ஞானசேகரனை அழைத்து விசாரித்து இருக்கிறார்கள். உடனே விடுவித்து இருக்கிறார்கள். எந்த விதத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்?

இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டதாக பத்திரிகை செய்தி வருகிறது. ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது எல்லாம் பார்க்கின்ற பொழுது ஆளுங்கட்சியை சேர்ந்தவரை தப்பிக்க வைக்க இந்த காவல்துறை செயல்படுகிறது என்ற அச்சம் மக்களுக்கு இருக்கிறது. நடுநிலையோடு, உண்மையாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விசாரணை நடைபெற வேண்டும். இந்த வழக்கை சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Tags :
Anna universityCBIedappadi palaniswamiEPSPoliceSexual Harrassement
Advertisement
Next Article