அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அதன்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார். கடந்த 2022 ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்தாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, சிறையில் உள்ள ஞானசேகரனை 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் இதுவரை ஞானசேகரன் கொள்ளையடித்த சுமார் 100 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் விசாரணையில், பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் தனி நபராக சொகுசு காரில் சென்று கொள்ளையடித்த ஞானசேகரன் 2022ம் ஆண்டு ஒரு வீட்டில் திருடுவதற்கு வெளிமாநில கூட்டாலியுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கனாத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 16 குற்ற வழக்குகளில் சிறைக்கு சென்று வந்ததும், திருந்தி வாழ்வது போல் பிரியாணி கடை வைத்துக் கொண்டு நள்ளிரவு காரில் வந்து தனி ஒரு ஆளாக கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே 100 சவரன் நகைகள் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 120 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்த ஞானசேகரனுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து, இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.