அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, ஞானசேகரனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். குற்றவாளி ஞானசேகரனை எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஞானசேகரனுக்கு 3 மணி நேரம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 11 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், ஞானசேகரன் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, ஞானசேகரனை பிப். 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஞானசேகரன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.