அங்கித் திவாரி விவகாரம்- டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்..
அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு டிஜிபியிடம் அமலாக்கத்துறை மதுரை மண்டல துணை அலுவலகத்தின் உதவி இயக்குநர் புகார் அளித்தார். அப்புகாரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரையடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு
உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து கடிதத்தை அனுப்பி
வைத்துள்ளார். இதுதொடர்பாக காவல் உதவி ஆணையர் பெயரில், அமலாக்க துறை அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் கொடுக்கப்பட்டது. மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டும் அமலாக்கத் துறை ஆஜராகவில்லை.
இந்நிலையில், அந்த சம்மனில் விரிவான தகவல் இல்லை என்று அமலாக்கதுறை சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யார் அனுப்பிய சம்மன் ? என்று எங்களுக்கு தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்களுக்கு கிடைத்ததே செவ்வாய்க்கிழமை தான் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். அதில் எதற்கான விசாரணை என்ற விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எங்கள் அலுவலகத்தில் சட்டவிரோத சுரங்கம், ஊழல் வழக்குகள், முதலீட்டு மோசடி வழக்குகள், வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட வழக்குகளை பணமோசடி தடுப்புச்சட்டத்தின்கீழ் விசாரித்து வருகிறோம்.
இச்சூழலில் டிச.,1ல் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் சட்டவிரோதமாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை திருடியுள்ளனர். இதுகுறித்து, டிச.,2ல் டி.ஜி.பியிடம் புகார் அளித்தோம். லஞ்சஒழிப்பு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய டிச.16ல் டி.ஜி.பிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினோம். உங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். என்னென்ன விபரங்கள், ஆவணங்கள் தேவை என தெளிவாக குறிப்பிட்டால் அதற்கேற்ப தயாராக வருவோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.