‘ஏங்ங்கக..! - கூமாப்பட்டி அணைப் பூங்காவை மேம்படுத்த இத்தனை கோடி நிதியா!
தி.மு.க. அரசு சாமானியர்களின் குரலுக்கு எப்போதும் செவிசாய்க்கும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் உள்ள பிளவக்கல் அணைப் பகுதியில், பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வசதிகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த அரசாணை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது,“சாமானிய மக்களின் குரலுக்கு நம் அரசு எப்போதும் செவிசாய்க்கும். கூமாப்பட்டி பிளவக்கல் அணைப் பகுதியில் பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.”
இந்த நிதியின் மூலம், பூங்காவில் நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற வசதிகள் அமைக்கப்படும். இது இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதை இது காட்டுகிறது. இந்த முடிவுக்கு தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது நன்றியைத் தெரிவித்தார்.