பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் - ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஆந்திராவை சேரந்த முதாவத் முரளி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தவர். ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து தனது சொந்த நிதியில் இருந்து நாயக் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில் நாயக்கின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 5 ஏக்கர் விவசாய நிலமும், ரூ.50 லட்சம் நிதியும் அரசு வழங்கும் என ஆந்திரப் பிரதேச கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் அறிவித்துள்ளார்.
இன்று நாயக்கின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அமைச்சர் நாரா லோகேஷ், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.