சிங்கப்பூரில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் தீவிபத்தில் காயம்!
ஆந்திராவில் முன்னணி நடிகராக இருந்து அரசியல் களத்திற்குள் நுழைந்தவர் சிரஞ்சீவி தம்பியான பவன் கல்யாண் . தனக்கென தனி ரசிகர்களை கொண்ட இவர் ஆரம்பத்தில் ரசிகர் மன்றம் மூலம் சிறு சிறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதனைத்தொடர்ந்து ஆந்திர அரசியலில் குதிக்க விரும்பிய அவர் தனது கட்சிக்கு ஜனசேனா கட்சி என பெயரிட்டு தீவிர தேர்தல் அரசியலில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் தனித்தும் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியுடனும் சேர்ந்து போட்டியிட்ட பவன் கல்யாண் கடந்த வருடம் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் சந்திர பாபு நாயுடு தலைமையிலான கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தார்.
ஆந்திர அரசியலில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிய பவன் கல்யாணின் கட்சி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக மாறியது. மேலும் முக்கிய அமைச்சர் பொறுப்பு அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தது போலவே துணை முதலமைச்சராகவும் பதவியேற்றார்.
ஆந்திர அரசியலில் சமீபத்தில் திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அதனை மிகத் தீவிரமாக கொண்டு சென்று பூஜைகள், விரதம் மற்றும் யாத்திரைகளை மேற்கொண்டார். துணை முதலமைச்சராக பவன்கல்யாணின் அதிரடியான நடவடிக்கைகள் அவர்களது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டாலும் எதிர்க்கட்சிகளால் சினிமாத்தனமாக இருப்பதாக விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார்.
இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அப்பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தனது மகனின் உடல்நிலை குறித்த அறிய சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்