பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்...இனி நானே தலைவர் - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பாமக கூட்ட மேடையில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பாமக நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதனை உங்களுடன் தற்போது பகிர முடியாது. மேலும் கௌரவ தலைவராக ஜி.கே.மணி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.