”மோசடியாக ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது அன்புமணி தரப்பு”- ஜி.கே. மணி குற்றச்சாட்டு..!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பினரும் வெவ்வேறு அணிகளாக செயல்படுகின்றனர். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவை கூட்டி அன்புமணியின் செயல் தலைவர் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்தது. பதிலுக்கு ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அளிக்க கோரப்பட்டது. ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
இதனிடையே அன்புமணி தரப்பில், அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்றும் தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தை, பாமகவின் தலைமை அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து மாம்பழம் சின்னத்தையும் வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ராமதாஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் டெல்லியில் ராமதாஸ் தரப்பு பாமகவினர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து புகாரளித்தனர்.
இந்த நிலையில் இன்று பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி (ராமதாஸ் தரப்பு) டெல்லியில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”அன்புமணி தரப்பில் மோசடியாக ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது. அன்புமணி பொதுக்குழு தேதியை ஒரு ஆண்டு பின் தேதியிட்டு மோசடியான ஆவணத்தை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி வழங்கியுள்ளார். இது கட்சி திருட்டு. தேர்தல் ஆணையமானது, அன்புமணி கடந்த 2023 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவரின் தலைவர் பதவி 2026 ம் ஆண்டு வரை இருக்கிறது என்றும் ஒப்புதல் அளித்துள்ளது. இது மிகப்பெரும் மோசடியாகும். இது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் ஆணையம் போலியான ஒரு ஆவணத்தை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். கடந்த 2022 ஆண்டுதான் பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இவ்வளவு வெட்ட வெளிச்சமாக நடைபெற்ற ஒரு பொதுக்குழுவை மோசடி செய்திருக்கிறார்கள்.
ஜனநாயகத்தை கட்டி காக்க வேண்டிய தேர்தல் ஆணையமே இவ்வாறு மோசடியான ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த மோசடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியிலாக நடவடிக்கை எடுக்கப்படும், ஜனநாயகரீதியிலாக போராட்டம் நடத்தப்படும்.
தேர்தல் ஆணையத்தில் ஏதோ ஒரு மோசடி நடந்துள்ளது. பாமகவை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அன்புமணி ராமதாஸ் செயல்பட்டுள்ளார். பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ கொடுத்த அழுத்தத்தினால் தான் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை, அவ்வாறு நினைக்கவும் இல்லை” என்று தெரிவித்தார்.