எலி கடித்ததா? பாம்பு கடித்ததா? என்ற குழப்பத்திலேயே பறிபோன மூதாட்டி உயிர்!
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே திடல் ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் இயேசு தாசன். இவருடைய மனைவி மணி. இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். சமையலுக்காக தேங்காய் எடுப்பதற்காக அருகில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு கிடந்த தேங்காய் குவியலுக்குள் அவர் கையை விட்டு தேங்காய் எடுத்துள்ளார்.
அப்போது அவரது கையை ஏதோ கடித்துள்ளது. இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு அங்கு பார்த்தபோது எலி ஒன்று ஓடியுள்ளது. இதனால் எலிதான் கையை
கடித்துள்ளது என நினைத்த மணி, அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல மணிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன மணி அக்கம் பக்கத்தினரிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.
உடனே அவர்கள் மணியின் வீட்டுக்கு வந்து தேங்காய் குவியலை விலக்கி பார்த்தனர். அப்போது அங்கு ஒரு எலியும், நல்லப்பாம்பும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நல்லப்பாம்பு தான் மணியை கடித்திருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனை சென்ற மணி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, மணியை நல்லப்பாம்பு கடித்துள்ளதாக கூறினர். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்துவிட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தியில் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.