ஸ்கூட்டரில் குழந்தைகளுடன் சென்ற பெண்மீது தாக்குதல் நடத்திய முதியவர் கைது!
புனேயில் காருக்கு வழிவிடவில்லை என ஸ்கூட்டரில் சென்ற பெண்ணின் முடியை பிடித்து இழுத்து முகத்தில் குத்திய முதியவர் கைது செய்யப்பட்டார்.
புனேவைச் சேர்ந்த சேர்ந்த ஷெர்லின் டிசில்வா (27) என்ற பெண் நேற்று இரண்டு குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் பாஸன்-பனேர் இணைப்பு சாலையில் சென்றுள்ளார். அப்போது அவரின் ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த கார் அவரை முந்தி செல்ல முயன்றுள்ளது. ஆனால் அதற்கு போதிய வழி கிடைக்கவில்லை. இதையடுத்து காரை வேகமாக ஓட்டி வந்து ஸ்கூட்டருக்கு முன்பு நிறுத்திய கார் ஓட்டுநர் ஸ்வப்னில் (57), கோபத்தில் ஷெர்லினிடம் வாக்குவாதம் செய்து, ஷெர்லின் முடியை பிடித்து இழுத்து அவரது முகத்தில் குத்தியுள்ளார். இதனால் அவரது மூக்கில் ரத்தம் சொட்டியது.
இதனையடுத்து ஷெர்லின் இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ பதிவிட்டார். அந்த வீடியோவில்,
“எனது ஸ்கூட்டருக்கு பின்னால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காருக்கு வழிவிடும் விதமாக எனது ஸ்கூட்டரை சாலையின் இடதுபக்கமாக ஓட்டினேன். அப்படி இருந்தும் காரை எனது வாகனத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்தி, அதில் இருந்து இறங்கி வந்த வயதானவர் குழந்தைகள் என்னுடன் இருப்பதை பற்றி கவலைப்படாமல் என்னை முடியை பிடித்து இழுத்து முகத்தில் இரண்டு குத்து குத்தினார். எனது மூக்கில் ரத்தம் வந்தது. ஏன் மக்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். நகரில் என்ன பாதுகாப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு எதாவது நடந்திருந்தால் என்ன ஆவது. அந்த வழியாக சென்ற ஒரு பெண் எனக்கு உதவி செய்தார்'' என கூறியுள்ளார்.