ஓசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை - வீட்டிற்கு தீ வைப்பு!
ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (70). இவர் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தார். இவரின் சொந்த ஊர் மன்னார்குடி பகுதியாகும். அங்கு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி தெரசா (65). இவர்களுக்கு விக்டோரியா மற்றும் சகாயராணி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
லூர்துசாமியின் மனைவி தெரசா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இளைய மகள் விக்டோரியா அங்கிருந்து அவரை பார்த்து வருகிறார். இதனிடையே லூர்துசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவருக்கு துணையாகவும், சமையல் செய்து கொடுக்கவும் தெரசாவின் தங்கை எலிசபெத் அவருடன் வசித்து வந்துள்ளார். அவரது மூத்த மகள் சகாயராணி தாயைப் பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று லூர்துசாமியின் வீட்டில் திடீரென தீப்பிடித்து
எரிந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் நகர போலீசாருக்கும்,
தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு லூர்துசாமி மற்றும் எலிசபெத் ஆகியோர் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதில் எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி கொன்று விட்டு, தீ
விபத்தை ஏற்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி தங்கதுரை, ஏஎஸ்பி சங்கர் கலால், டிஎஸ்பி சிந்து, டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை பிடிக்க மோப்பநாய் உதவியுடன், அந்தப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை பற்றி ஓசூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.