சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி | #Tenkasi -ல் எலுமிச்சை விலை உயர்வு!
அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் புளியங்குடி பகுதியில் எலுமிச்சை பழங்களின் விலை உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குட்பட்டனர். வெயிலின் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களான இளநீர், தர்பூசணி மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் வாங்கி பருகத் தொடங்கியுள்ளனர். இதேபோல, மருத்துவ குணங்கள் நிறைந்த மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் எலுமிச்சை பழம் மற்றும் வெள்ளரிக் காய்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதனால், இவற்றின் தேவை அதிகரித்துள்ளது.அந்த வகையில், அதிக நீர்ச்சத்து கொண்ட எலுமிச்சை பழங்களின் தேவையானது கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பழங்களின் விலையும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையும் படியுங்கள் : செஞ்சி கோட்டையில் இன்று #UNESCO குழுவினர் ஆய்வு! பொதுமக்கள் பார்வையிட தடை!
குறிப்பாக, புளியங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் எலுமிச்சை பழ மார்க்கெட்டில், எலுமிச்சை பழங்களின் விலையானது தரத்திற்கு ஏற்ப ரூ.140 முதல் 150 வரை தற்போது விற்பனையாகி வருகிறது. மேலும், தேவை அதிகரித்து காணப்படுவதன் காரணமாக எலுமிச்சை பழங்களின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.