கேரளாவிலிருந்து ஒரு விமான நிறுவனம் - 2025 முதல் சேவையை தொடங்குகிறது 'ஏர் கேரளா'!
கேரளாவைச் சார்ந்த தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்டுள்ள விமான நிறுவனமான 'ஏர் கேரளா' மத்திய அரசின் தடையில்லா சான்று பெற்றதைத் தொடர்ந்து 2025 முதல் சேவையை தொடங்குகிறது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து ஏர் கேரளா விமான நிறுவனம் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம் வருகிற 2025-ம் ஆண்டு முதல் உள்நாட்டு விமான சேவைகளை ஏர் கேரளா தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு வளைகுடாவில் நாடுகளில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஃபி அகமது மற்றும் அயூப் கல்லடா ஆகிய இருவரும் ஏர் கேரளா எனும் விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளனர். இதன் முயற்சியாக கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினர்.
இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தை சார்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி கோரினர். தற்போது மத்திய அமைச்சகத்திடமிருந்து ஏர் கேரளா விமான நிறுவனத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளது. முழுமையான தங்களின் செயல்பாடுகளை தொடங்க தற்போது ஏர் கேரளா நிறுவனம் விமானங்களை வாங்க வேண்டும். அதேபோல ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (ஏஓசி) பெறுவதற்கான ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
ஏர் கேரளா விமான நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அஃபி அஹமது இதுகுறித்து கூறுகையில் ..
” இது ஒரு முக்கியமான கட்டமாகும். விமான போக்குவரத்து அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தரங்களையும் நாங்கள் சரியாக நிறைவேற்றியுள்ளோம். பலர் எங்களிடம் இது ஒருபோதும் நடக்காது என்று நிராகரித்தார்கள். நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் NOC கிடைத்ததே எங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகும்” என தெரிவித்தார்.
ஏர் கேரளா என்பது வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் வசிக்கும் மலையாளிகளின் கனவுத் திட்டமாகும். தற்போது ஏர் கேரளா உள்நாட்டு வழித்தடங்களை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. புத்தம் புதிய விமான சேவை கேரளாவின் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. வரும் ஆண்டுகளில் கேரளாவில் இருந்து வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் பயண நெருக்கடிகள், அதிகப்படியான விமான கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பயனுள்ள தீர்வுகளை காண முடியும் என்று Zettfly Aviation துணைத் தலைவரும் ஏர்கேரளா உரிமையாளர்களில் ஒருவருமான அய்யூப் கல்லாடா கூறினார்.
விமான போக்குவரத்து தொடங்கியதும் கேரளாவில் மட்டும் 350 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஏர்கேரளா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இதன் உரிமையாளரான அஃபி அகமது airkerala.com எனும் டொமைனை 1 மில்லியன் திர்ஹம்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.2.2கோடி) வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.