ரூ.2லட்சம் கொடு.. #IPS வேலை கன்ஃபார்ம்.. என 18வயது சிறுவனிடம் மோசடி - Police Uniformல் சிறுவன் சுற்றியதால் பரபரப்பு!
ரூ.2 லட்சம் கொடுத்தால் ஐபிஎஸ் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி பணத்தை கொடுத்துவிட்டு, போலீஸ் உடையுடன் சுற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. ரூ.2 லட்சம் கொடுத்தால் ஐபிஎஸ் வேலை வாங்கித் தருவதாக மனோஜ் சிங் என்ற இளைஞர் 18 வயது சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய மிதிலேஷ் குமார் (18) என்ற சிறுவன் தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சத்தை கடனாக பெற்று அதில் பாதியை மனோஜ் சிங்கிடம் கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனின் உடல் அளவீடுகளை எடுத்துக் சென்ற நிலையில், அடுத்த நாள் அந்த சிறுவனை அழைத்து, ஐபிஎஸ் உடை, பேட்ஜ் மற்றும் துப்பாக்கியை கொடுத்தார். இதனைப்பார்த்த அந்த சிறுவன் ஐபிஎஸ் அதிகாரியானதாக நம்பி மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
பின்னர், ஐபிஎஸ் சீருடையை அணிந்து கொண்டு இடுப்பில் துப்பாக்கியுடன் தனது தாயை சந்திக்க சென்றார். தொடர்ந்து, மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க அவர் புறப்பட்டார். அப்போது மிதிலேஷ் குமாரை பார்க்க கூட்டம் கூடியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த ஒருவர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மிதிலேஷ் குமாரை கைது செய்தனர். கைது செய்யும்போது மிதிலேஷ் குமார் "நான் ஒரு ஐபிஎஸ்" என கூறினார். மேலும், அந்த சிறுவனிடம் இருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.