பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பார் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர். இவரது மகன் கௌஷிக் (11). கௌசிக் ஆறாம் வகுப்பு முடித்துவிட்டு, கோடை விடுமுறையில் இருந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் வயல் வெளிப்பகுதிக்கு விளையாட சென்றுள்ளார். இதனிடையே அப்பகுதியில் நேற்று நள்ளிரவு (மே.15) பெய்த தொடர் மழை மற்றும் காற்றால் பனைமரம் முறிந்து விழுந்து மின் வயர் அறுந்து கீழே கிடந்துள்ளது.
அப்பொழுது கௌஷிக் வளர்க்கும் வளர்ப்பு நாய் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து, மின்சாரம் தாக்கி துடிதுடித்துள்ளது. இதனைப் பார்த்த சிறுவன் நாயைக் காப்பாற்ற சென்ற போது மின் வயரில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பின் அவரது உடல் மீட்கப்பட்டு பரமக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து நயினார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.