அமோனியா வாயு கசிவு விவகாரம்: தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்த பசுமை தீர்ப்பாயம்!
சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ஆலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அமோனியா வாயு வெளியேறியதால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்: வரும் 30-ந் தேதி முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!
இதிலிருந்து அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அமோனியா கசிவால் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தற்காலிகமாக அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சூழல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கை ஜனவரி 2-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, தீர்ப்பாய பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.