அகிலேஷ் யாதவின் கிண்டல்... சூசக பதிலளித்த அமித்ஷா - மக்களவையில் வெடித்த சிரிப்பலை!
நாடாளுமன்றத்தில் மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் அவையில் பேசினார். அப்போது எதிர்க்கட்சியின் வரிசையில் எம்.பி-க்கள் கூட இல்லை என பா.ஜ.க.வினர் கூறியதற்கு பதில் கொடுத்த அகிலேஷ் யாதவ்,
“நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளேயே இப்போது யார் பெரியவர்? என்ற பிரச்சனை நிலவுகிறது. மேலும், உலகின் மிக பெரிய கட்சி பாஜக என்கிறார்கள். ஆனால் அவர்களால் இன்னும் ஒரு தேசிய தலைவரை கூட தேர்வு செய்யமுடியவில்லை” என சிரித்துக் கொண்டே அகிலேஷ் யாதவ் கிண்டல் அடித்தார்.
இதற்கு மக்களவையில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
“நீங்கள் சிரித்து கொண்டே கூறியதிற்கு, நானும் சிரித்து கொண்டே பதில் கூறுகிறேன். எனக்கு முன்பாக உள்ள (எதிர்க்கட்சிகள் வரிசையை குறிப்பிட்டு) கட்சிகள் எல்லாம் அக்கட்சியின் தலைவரை அவர்கள் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரில் தேர்வு செய்தால் போதும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவுடன் பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்” என பதிலடி கொடுத்தார்.
இதற்கு மீண்டும் பதில் கொடுத்த அகிலேஷ் யாதவ், சமீபத்தில் ஒரு பயணம் மேற்கொள்ளப்பட்டது. அந்த பயணம் 75 வயதை நீட்டிப்பதற்கான பயணமாகவே சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடியின் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையக பயணம் குறித்து சூசகமாக பேசினார். இதனால் மக்களவையில் சில நொடிகள் சிரிப்பலை ஏற்பட்டது.