அமித்ஷா நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் - அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!
வெறும் தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கிருந்த எம்.பி-க்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களே மடக்கிப் பிடித்த நிலையில், பின்னர் இருவரும் அவை பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளையில், மக்களவையின் உள்ளே நுழைந்தவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசிய மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம் என்ற பெண்ணும், அன்மோல் ஷிண்டே என்பவரும் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களில் மனோ ரஞ்சன் என்பவர் மைசூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும், மற்றொருவர் சாகர் சர்மா என்பதும் தெரியவந்திருக்கிறது.
மேலும், மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை கடிதத்தை காண்பித்து இருவரும் மக்களவைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் புகையை உமிழும் பொருளை வீசியதாகவும் இதனால் கண்கள் எரிந்ததாகவும் நேரில் பார்த்த எம்பிக்கள் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும், பாரத் மாத ஹி ஜெய் மற்றும் சர்வாதிகாரம் கூடாது என்று கோஷம் எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாட்டின் பாதுகாப்பே உயிர்மூச்சு எனக் கூறிக் கொள்ளும் பாஜக, நாட்டின் உட்சபட்ச பாதுக்காப்பு இடமாக இருக்கும் நாடாளுமன்ற மக்கள் அவைக்குள் நடந்த தாக்குலை தடுக்க முடியவில்லை. இதனை மறைக்க, வழக்கம் போல சதிக் குற்றச்சாட்டுகளைக் கூறித் திசைதிருப்ப முயன்றோருக்கு, பாஜகவின் மைசூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்தான் அனுமதி தந்தார் என்ற செய்தி ஏமாற்றத்தை தந்திருக்கிறது.
https://www.facebook.com/story.php?story_fbid=902074734812435&id=100050297507534&mibextid=9R9pXO
நாடாளுமன்றத்தில் விவாதங்களை நடக்கவிடாமல், ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கினால், வேண்டாத இடத்திலிருந்து ஆபத்தான வடிவத்தில் குரல்கள் எழும் என்பதற்கு சான்று இன்றைய தாக்குதல். வெறும் தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார்.” எனப் பதிவிட்டுள்ளார்.