#America ஸ்டான்போர்ட் பல்கலை. எல்சிவியர் தரவரிசை பட்டியல்! திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் தேர்வு!
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக எல்சிவியர் தரவரிசைப் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 5 பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெவ்வேறு துறைகளில் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், 2024, ஆகஸ்ட் மாதம் வெளியான 7-வது தரவரிசை பட்டியலில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளின் கீழ் 2.17 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் எம். லட்சுமணன் (இயற்பியல்), ஆா். ரமேஷ் (வேதியியல்), எம். பழனியாண்டவர் (வேதியியல்), எம். சத்தியபாமா (தாவரவியல்), தை.சி. சபரிகிரிசன் (இயற்பியல்) ஆகிய 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் :ஹங்கேரியில் நடந்த #ChessOlympiad போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பிய நட்சத்திரங்களுக்கு உற்சாக வரவேற்பு!
குறிப்பாக உலகளவிலான முதல் 2 சதவிகித எண்ணிக்கைக்குள்ளானோர் பட்டியலில் உள்ள நபர்களில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த கே. ரவிச்சந்திரன் (இயற்பியல்), எம். அய்யனார் (தாவரவியல்), எம். ஜோதிபாசு (இயற்பியல்) ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்றுள்ள போராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம் பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், "2024 ஆம் ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் 36வது இடத்தைப் பெற்றுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் பிற கல்வி பங்களிப்புகளில் சிறந்து விளங்கும் வகையில் பல்கலைக்கழகம் செய்து வரும் சிறப்புப் பணிகளைப் பிரதிபலிக்கிறது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.