அம்பேத்கர் ஜெயந்தி - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
அண்ணல் அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய அவர் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில், ஏப்.14ம் தேதியான இன்று அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நமது அரசியலமைப்பின் முக்கிய சிற்பியான பாரத ரத்னா பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் ஜெயந்தியன்று, தேசம் அவருக்கு ஆழ்ந்த மரியதை செலுத்துகிறது. ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களின் சமூக நீதிக்காகவும், ஒன்றுபட்ட இணக்கமான தேசத்தை கட்டியெழுப்பவும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
நமது அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், அதன் உணர்வை பாபா சாகேப் கற்பனை செய்தபடி பேணுவதும், அதன் விழிப்புணர்வை கடைசி மனிதனுக்கு பரப்புவதும் ஒவ்வோர் குடிமகனின் கடமையாவதுடன், இது வளர்ச்சியடைந்தபாரதம்2047 க்கும் வழிவகுக்கும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.